நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நிதி ஒதுக்கீடு
வட மாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் 9.91 மில்லியன் ரூபா நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
அதன் முதற்கட்டமாக கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேருக்கு நன்னீர் மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
50 வீதம் மானியம்
வலையின் பெறுமதியில் 50 வீதத்திற்கான பணத்தை பயனாளர்கள் செலுத்துவதுடன் 50 வீதம் மானியமாக வழங்கப்படுகின்றது.
மீன் பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25.10.2025) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீன் பிடி அலகின் பணிப்பாளர் அருளானந்தம் சீராளன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு மீன் பிடி வலைகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவசிறீ, கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







