வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம் - கூறுகிறார் ஆளுநர்
வட மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், புதிதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (24.08.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு
இதன்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வட மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது வட மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

வட மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கவனம் செலுத்தப்பட்ட விடயம்
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயமகா அவர்களும் கலந்துகொண்டார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening