பல்வேறு கோரிக்கைகளுடன் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் (Photos)
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடங்கியதான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று(21) காலை 8.00மணியளவில் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கரைதுறைப்பற்று பிரிவில் 110 முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.
அதில் 66 பேர் பெண் தலைமைத்துவ குடும்பத்தினை சேர்ந்தவர்கள். முன்பள்ளிகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் பலதரப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகளில் எங்களை பயன்படுத்துகின்ற போதிலும் எங்களுக்கு மாதம் வெறுமனே ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகிறோம். மேலும் எமக்கான சாதகமான பதில்வரும் வரை கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலக்குகிறோம்.
மேலும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை தமக்கான உரிய தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை'' இவ்வாறு கூறியுள்ளனர்.
இதன்போது எம் விதியை மாற்று எமக்கு வழிகாட்டு!, அத்திவாரம் எழும்பும் எம்மை படுகுழியில் தள்ளாதே, 6000ரூபா ஊக்குவிப்பு தொகை இன்று போதுமா?, நிரந்தர நியமனம் வேண்டும்! போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன் தங்களது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் கையளித்திருந்தனர்.
குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களின் ஆதங்கங்களைக் கேட்டறிந்து குறித்த கோரிக்கைகள் உரிய நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படுவதுடன், இப் பிரச்சினையினை உயர்மட்டக் கலந்துரையாடல்களிலும் தெரியப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
[RTS3GQ]
[
வவுனியா
சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், வடமாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
வவுனியா - பூங்கா வீதியில் உள்ள ஆளுநரின் பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று (21.02) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, 'முன்பள்ளி கலைத்திட்டத்தை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்?, இன்றைய விலை வாசியில் 6000 ரூபாய் போதுமனதா, உழைப்பிற்கான ஊதியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும், கல்விப் பயணத்தின் முதற்படியான ஆசிரியர்களை முழுமையாக்குங்கள்' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கையில்,
''அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களாகப் பல வருடங்களாக நாம் பணியாற்றுகின்ற போதும், உதவித் தொகையான வெறும் 6000 ரூபாய் மட்டுமே எமக்கு கிடைக்கின்றது.
தற்போதைய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் இந்த 6000 ரூபாய் பணத்தை வைத்து நாம் எவ்வாறு குடும்ப சீவியத்தைக் கொண்டு நடத்த முடியும். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என பலரும் சேவை நோக்கத்தோடு பணியாற்றி வருகின்றோம். எனினும் எம்மால் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது.
எமது குடும்பங்கள் பட்டினியால் இறக்கும் நிலை வரும். எனவே எமக்கான சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு நாம் இந்த அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை மட்டுமே தருகிறார்கள் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா அவர்களது கோரிக்கை தொடர்பான மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு வாரத்திற்குள் தீர்க்கமான முடிவினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
[EQAUPS]
[MAG6K]
[MWEVDJ]
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் தமக்கு வழங்கப்படும் 6000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்க கோரியும், நீண்ட காலமாகத் தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்றி வருவதாகவும், எனவே இந்த அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரிடம் முன்பள்ளி ஆசிரியர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியாவிற்குச் சென்றதன் காரணமாக இன்றைய தினம் சந்திக்க முடியாது என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்ற முன்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஆளுநரின் செயலாளர் தம்மை வந்து சந்திக்க வேண்டும் எனக்கோரித் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.








