யாழில் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டும் கடமைகளை பொறுப்பேற்காத அதிபர்கள்: வடக்கு கல்வி அமைச்சு அலட்சியம்
யாழ்.மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்ட 27 அதிபர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்காது தொடர்ந்தும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் தீவகம் தவிர்ந்த யாழ் ,வடமராட்சி, தென்மராட்சி, வலிகாம வலயம் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர் நியமனத்திலும், அதிபர் நியமனத்திலும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத சுமார் 47 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் முதற்கட்டமாக 27 பேர் வெளி மாவட்டத்துக்கு வடக்கு கல்வி அமைச்சின் செயலாளரினால் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு சமர்ப்பிப்பு
இந்நிலையில் பணி இடமாற்றம் வழங்கப்பட்ட அனைவரும் மேல்முறையீட்டை சமர்ப்பித்த நிலையிலும், அவர்களினால் முறையான காரணங்கள் தெரிவிக்கப்படாத காரணத்தினால் மேன்முறையீடும் மேன்முறையீட்டு சபையினால் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் ஒரு அதிபர் மாத்திரம் வெளி மாவட்டத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார் என அறியக்கிடைக்கும் நிலையில், ஏனையவர்கள் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளரின் துணையுடன் தொடர்ந்தும் யாழில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு
கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை எனவும் அங்கிருக்கும் எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.



