போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கை
போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முப்படையினர், பொலிஸார் மாத்திரமே மேற்கொண்டு விட முடியாது. அதற்கு பொதுமக்களும் கைகோர்த்தால் மாத்திரமே எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று(14.01.2026) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டக் கலந்துரையாடலிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத் திறன்விருத்தி மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் கடற்றொழில் நீரியல், கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோர் பிரதம விருந்தினராகப் கலந்துகொண்டுள்ளனர்.
போதைப் பொருள் ஒழிப்பு திட்டம்
இந்நிலையில், நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், ஆளுநருமான நா.வேதநாயகன் தனதுரையில் கருத்து தெரிவிக்கையில்,
எமது நாட்டில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதே போன்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், இந்த உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதுக்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாகவே பிரதேச மற்றும் மாவட்ட மட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதுக்குரிய செயற்றிட்டங்களும் அவசியமானது. வடக்கு மாகாணத்தில் இதற்கு என தனியான புனர்வாழ்வு நிலையம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கே அனுப்பப்படுகின்றனர்.
அங்கும் போதிய இடவசதி இல்லாத நிலைமை காணப்படுகின்றது. எனவே, எமது மாகாணத்தில் தனியானதொரு புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனந்த விஜயபால விடுத்த கோரிக்கை
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கருத்து தெரிவிக்கையில்,
இன, மத பேதமின்றி எமது பிள்ளைகள் இந்த உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். நாம் இதைக் கட்டுப்படுத்துவதுக்கு இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஒன்று, நாட்டுக்குள் போதைப்பொருள் வருவதைத் தடுப்பதுக்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

இரண்டாவது, நாட்டுக்குள் போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் ஒரு கட்டமாகவே இவ்வாறான பிரதேச மற்றும் மாவட்டக் குழுக்களை நிறுவுகின்றோம்.
இவர்கள் ஊடாகப் பரந்துபட்ட விழிப்புணர்வுகளை மேற்கொள்வதன் மூலம் போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைக்க முடியும். விநியோகத்தை நிறுத்தல் மற்றும் கேள்வியை இல்லாமல் செய்தல் ஆகிய வழிமுறைகள் ஊடாக இதைக் கட்டுப்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம்.
புனர்வாழ்வு நிலையம் அமைப்பு
உங்கள் பிள்ளைகள் போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என்பதற்காகப் பெற்றோர்களாகிய நீங்கள் மௌனமாக இருக்க வேண்டாம். இந்தத் தேசிய செயற்றிட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்வதன் ஊடாக, எந்தவொரு காலத்திலும் எங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும்.
ஆளுநர் குறிப்பிட்டதைப்போன்று முப்படையினர் மற்றும் பொலிஸாரால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். போதைப்பொருள் தொடர்பான தகவல்களை நீங்கள் இரகசியமாக வழங்க முடியும்.
அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சுமார் 450 பொலிஸாரைக் கூட நாம் பணி நீக்கம் செய்துள்ளோம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மதத் தலைவர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan