போசாக்கின்மையால் பாதிக்கப்படும் வசதி படைத்தோர் - வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
இன்றைய காலக்கட்டத்தில் வசதி படைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சியில் நேற்று(21) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அன்று வறுமையால்தான் போசாக்கின்மை எம்மிடத்தே தலைதூக்கியிருந்தது. இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவு பழக்கம்
அவர்களின் உணவுப் பழக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
எனவே, இன்றைய மாணவர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வு கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை எதிர்காலத்தில் அவர்களிடம் விதைக்க முடியும்.
இன்றைய மாணவர்களின் மேம்பாட்டுக்காக, இளைய சமூகத்தை வழிப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் மாத்திரமல்ல ஏனைய துறையினரும் ஒன்றிணைய வேண்டும்.
இளையோரின் நலன்
ஏனெனில், இன்றைய பாடசாலை மாணவர்கள் மாலை நேரங்களில் விளையாடுவதென்பது குறைவு. ஒன்றில் தனியார் கல்வி நிலையம் அல்லது கைப்பேசியில் என்கின்ற நிலையிலேயே அவர்களது வாழ்க்கை இருக்கின்றது.
எனவே, இளையோரின் நலன் தொடர்பில் அதிக பொறுப்பு பெற்றோரிடமே இருக்கின்றது.
பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கும் இவ்வாறான கண்காட்சிகள் இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















