வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள் குறித்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் முக்கிய கலந்துரையாடல்
வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள 'றீச்சா பார்க்' வளாகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் கடற்றொழில் துறைகளின் மேம்பாடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வட மாகாணத்தின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவது குறித்தும், குறிப்பாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், விவசாய விளைபொருட்களைப் பதனிடும் நிலையங்களை வடக்கில் விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடற்றொழில் துறையில் கடலுணவுகள், கடல் பாசி மற்றும் கடல் அட்டை போன்றவற்றுக்கான பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இதற்கமைவாக, விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல், பதனிடுதல் மற்றும் அவற்றிற்கான குளிர்சாதனக் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக தனியார் முதலீடுகளை வடக்கில் ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
