யாழிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு நேரடி ஏற்றுமதி - வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ள விடயம்
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதப் பிரதேசமான திருமுறிகண்டியில், 'அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்' மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான 'மேட் இன் முல்லைத்தீவு' (Made in Mullaitivu) ஆகிய இரு நிலையங்களையும் நேற்று (14.03.2026) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வளங்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக நான் பொறுப்பேற்றபோது, ஒன்றுமேயில்லாத அடிமட்டத்திலிருந்தே மாவட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. அன்று மாவட்டச் செயலாளராக இருந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். வடக்கு மாகாணத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதிக வளங்களைக் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவாகும். ஆனால், வறுமையின் பிடியிலும் இதுவே முதலிடத்தில் இருக்கின்றது.
இதனை மாற்றியமைப்பதற்கு இவ்வாறான தொழில்முயற்சிகள் நிச்சயம் கைகொடுக்கும். இங்கு அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழும் நிலையில், அவர்களை வாழ்வாதார ரீதியில் உயர்த்திவிட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இதற்குப் பெரும் பங்களிப்புச் செய்யும் கனேடியத் தமிழர் பேரவைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

காணி ஒதுக்கீடு
மேலும், குறித்த காணி ஒதுக்கீடு தொடர்பில் நினைவுகூர்ந்த ஆளுநர், 'இந்த இடம் மிகவும் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மாவட்டச் செயலாளராக நான் பணியாற்றிய காலத்திலேயே திருமுறிகண்டி ஆலயத்திற்கு அருகிலுள்ள இந்தக் காணியைச் சிவபூமி அறக்கட்டளைக்கு வழங்கினேன். பின்னர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்குக் கையளிக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் இந்தக் காணிகளைப் பாதுகாத்துப் பொருத்தமானவர்களுக்கு வழங்குவதற்கு நாம் பாரிய சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டோம். அந்த அதிகூடிய அழுத்தங்களுக்கு மத்தியில்தான் நாம் இந்தக் காணிகளைப் பாதுகாத்தோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri