டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது - ஆளுநர் தெரிவிப்பு
டித்வா புயல் இடர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளை மிகச் சிறப்பாக கையாண்டு வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி ஆண்டு
அவர் மேலும் தெரிவிக்கையில்: 2026ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரையில் ஒரு 'அபிவிருத்தி ஆண்டாக' அமையவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு அதிகளவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாகாண சபையின் வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் எமக்குக் கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன.
ஒதுக்கப்பட்ட நிதிகளை விட, மேலதிகத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் மேலும் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும், என்றார். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையுரையாற்றுகையில், மத்திய மற்றும் மாகாண நிதிகளுக்கு மேலதிகமாக, இவ்வாண்டு விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனக் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்புரையாற்றுகையில், 2025 இறுதியில் ஏற்பட்ட டித்வா பேரிடர் நிவாரணப் பணிகளுக்குச் சிறப்பான அரசியல் தலைமைத்துவமும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டன. 2026இல் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மாவட்டத்தில் நிலவும் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
முன்னேற்றங்கள் மீளாய்வு
இக்கூட்டத்தில், வடக்கு மாகாண சபைக்கு 2026ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த நிதியில் 20 சதவீதம், அதாவது 1,592 மில்லியன் ரூபா முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதியும் பெறப்பட்டது.
பிரதேச செயலக மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத விடயங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ து.ரவிகரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri