சட்டவிரோத மீன்பிடி முறைமைகளை தடுக்க ஒன்றிணையவுள்ள வடக்கு மீனவ அமைப்புக்கள்
சட்டவிரோத மீன்பிடி முறைமைகளைத் தடுக்க வடக்கு மாகாணத்தின் நான்குமாவட்டங்களின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் இன்று ( 27) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டுக் குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாட்டிலிருந்ததாகவும் எனவே நான்கு மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து ஒட்டுமொத்தமாகச் சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுக்கும் முகமாக ஒருநிலைப்பாட்டுக்கு வரும் முகமாகக் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
முல்லைத்தீவை தொடர்ந்து கிளிநொச்சி மன்னார் மாவட்ட மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும், கலந்துரையாடி எதிர்காலத்தில் ஒற்றுமையாக ஒரு நிலைப்பாடாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காகச் செயற்படப் போவதாக மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளனர்.



