கடற்றொழிலார்களின் நிலங்களை விடுவிக்காத அரசாங்கம்! வெடித்தது புதிய குற்றச்சாட்டு
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் கடற்றொழிலார்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளர் பேராசிரியர் சூசை ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீன்பிடி வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாததால் மீன் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு கடற்றொழிலார் குடும்பங்களில் பலர் இன்னும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளதாகவும், 65,000 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலார்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மயிலிட்டி கடற்றொழிலார்கள் தமது சொந்த இடங்களை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் இராணுவத் தேவைகளுக்குப் பதிலாக வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட விவசாயப் பயிர்ச்செய்கைகளுக்கும் வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்பு
மேலும், மயிலிட்டி, மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கடற்றொழிலார்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் தொழில் உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்த கடற்றொழிலார்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளையும் தொழில் வாய்ப்புகளையும் அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு கிழக்கு இளைய மீனவர் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் அனுசரணையிலும் சர்வதேச மீனவர் தின நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.