வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு 10 சதவீதமாக உயர்வு
வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இன்று(15.08.2026) வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்
அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தொழில் முயற்சியாளர்கள் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், புதுமையாகவும் புத்தாக்கமாகவும் சிந்தித்து தமது தொழில்களை விரிவுபடுத்துவதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறான புதிய முயற்சிகளே அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.

வட மாகாண உற்பத்திகளுக்கு உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி சந்தையிலும் சிறந்த வாய்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களில் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களை ஒரு முக்கிய சந்தையாகக் கொண்டு ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தித் திறன் அதிகமாக காணப்படுவதுடன், இந்தமுறை சிறுபோகத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
இருப்பினும் இவ்வாறான உற்பத்திகளில் பெரும்பகுதி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றப்படாமல் மூலப்பொருட்களாகவே வெளிமாவட்டங்களுக்கும் வெளிப்பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
வட மாகாண தொழிற்துறை
இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிகபட்ச பொருளாதாரப் பயன் கிடைப்பதில்லை. மூலப்பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதே வட மாகாணத்தின் தொழில் வளர்ச்சியின் அடுத்த முக்கிய கட்டமாக இருக்க வேண்டும்.
உற்பத்தி, பதனிடல், பொதியிடல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி என முழுமையான உற்பத்திச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தையும் போட்டித்திறனையும் உயர்த்த முடியும்.

வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தால் கடந்த காலங்களில் சிறிய அளவிலான பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.


