வடக்கு மாகாணத்தில் எந்தவொரு மாணவனுக்கும் வறுமை கல்விக்குத் தடையாக அமையக் கூடாது!
வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனுக்கும் வறுமை ஒருபோதும் கல்விக்குத் தடையாக அமையக் கூடாது. வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது. என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (22.05.2026) பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை அதிபர் சி.மகேந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து 23 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்த இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இப்பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மாடிக் கட்டடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநரால் புதிய கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டதுடன், வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.