தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மாகாண அரச சாரதிகள்
வடக்கு மாகாண (Northen Province) அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (03.06.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட அரச சாரதிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தொழிற்சங்க போராட்டம்
இதன்போது, வடக்கு மாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது, கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளரினால் (நிர்வாகம்) விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
இருப்பினும், ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்ட நிலையில், அரச சாரதிகள், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், போராட்டத்தினை தொடர்ந்து ஜீன் 1ஆம் திகதி தொடக்கம் இடைநிறுத்தப்பட்ட இடமாற்றமானது நடைமுறைபடுத்தப்படுமென எழுத்து மூலமான உறுதி மொழியினை பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) வழங்கியிருந்தார்.
ஆனால், குறித்த திகதியில் இடமாற்றம் நடைமுறைக்கு வராத நிலையில், வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், இடமாற்றம் வழங்கப்படாதவிடத்து தொடர்ச்சியாக ஜீன் 7ஆம் திகதி வரை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |