வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திற்கு இந்த புதிய வருடத்திலாவது தீர்வு கிட்டுமா!
வடக்கு, கிழக்கின் தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். தற்போது புதிய ஆண்டு (2026 ) பிறந்த நிலையில் பல ஆசிர்வாதங்களுடனும் புதுப்பொழிவுடனும் வாழ வேண்டும் என்பதை மக்கள் நினைக்கின்ற போதும் அது சாத்தியமாக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் நில அபகரிப்பு,காணாமல் போனோர்களின் உறவினர்களின் போராட்டம்,தனியார் காணிகளில் பௌத்தமயமாக்கம் என பல பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில் இவ்வருடம் தங்களுக்கு சிறப்பானதொரு எதிர்காலமாக அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக காணப்படுவதாக பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தை காப்பாற்ற உதவிகோரிய அரச தலைவர்: பாட்டலி வெளிப்படுத்திய இரகசியம்
நில ஆக்கிரமிப்பு
இது குறித்து திருகோணமலை நகரை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் கோகிலவதனி தெரிவிக்கையில் "எமது நாட்டை பொறுத்தவரைக்கும் சிறுபான்மை இனமாகிய நாங்கள் எல்லா வகையிலும் ஒடுக்கப்படுகிறோம்.மதம்,மொழி,இனம் என எல்லா வகையிலும் ஒடுக்கி அடக்கப்படுகிறோம்.
இது காலம் காலமாக நடைபெற்றே வருகிறது. இந்த வருடத்திலாவது சிறுபான்மை சமூகம் ஒடுக்கி அடக்கப்படாதளவுக்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் வாழும் போது சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை இந்த வருடம் முதல் எதிர்பார்க்கிறோம்.
500 மீற்றருக்கு ஒரு புத்தர் சிலையும் .எமது பழமை வாய்ந்த தொன்மைகள் இடங்களில் புத்தர் முளைத்திருப்பார். இரவோடு இரவாக இது நடைபெறும்.பின்னர் தொல்பொருள் என்ற போர்வையில் அதற்குரிய இடமென்று கட்டுப்படுத்தி எமது நிலத்தை கபளீகரம் செய்வார்கள்.

இந்து சைவ கடமைகளை செய்ய விடாது புத்தர் சிலையை நிறுவி விட்டு செல்வார்கள் இந்த நிலையில் அடாவடித்தனமான செயல் இவ்வருடத்தில் கடந்ந வருடத்தை போன்று இருக்க கூடாது .இனிவரும் காலங்களில் நிம்மதியாக வாழக்கூடிய வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும்.
அப்போது தான் நாட்டில் இனமதவாதமாற்ற நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்தால் முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடக்கம் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள அநுர அரசாங்கம் வரை வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு – ஒரு தொடரும் சவால்மிக்கதாக காணப்படுகிறது.
வடக்கு, கிழக்கு என்பது இலங்கை தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாக காணப்பட்ட போதிலும் தனியார் காணிகளுக்குள் அத்துமீறிய விகாரை கட்டிட நிர்மாணம்,புத்தர் சிலை வைப்பு ,தொல்பொருள் திணைக்கள பகுதி என பல இல்லாத பொல்லாத காரணங்களை காட்டி ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.
இது குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் ( PCCJ ) அமைப்பின் ஊழியருமான த.கிரிசாந் தெரிவிக்கையில், இலங்கையில் எண்ணிக்கையில் குறைவான மக்களின் உரிமைகளும் காணப்படுகிறது. எமது நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் அல்லது அடக்கு முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
மனித உரிமை மீறல்
அத்துடன் இதுவரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இன்று வரை இந்த அரசும் நீதியை நடைமுறைப்படுத்துவதாக தெரியவில்லை. வட கிழக்கை பொறுத்தவரை மக்களின் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் முறையற்ற விதத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் பல வழிகளிலும் போராடி வருகின்றனர். மயிலத்தனைமடு பண்ணையாளர்களின் நில மீட்பு போராட்டம் 900 நாட்களை நெருங்கியுள்ளது. திருகோணமலை முத்துநகர் விவசாயிகளின் போராட்டம் திட்டமிட்ட வகையில் மழுங்கடிக்கப்பட்டு அவர்களின் நில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பல உதாரணங்கள் உள்ளன. அரசு இவற்றை கண்டு கொள்வதாக இல்லை. மாறாக தொல்லியல் திணைக்களம்,வன வள திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற அரச கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதை நோக்கிலேயே செயற்படுகின்றன.

இந்நிலையில் அரசும் மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் கிராம மட்ட செயற்பாட்டாளர்களை தமது கட்சிக்கான உறுப்பினர்களாக மாற்றும் திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஏமாற்றும் திட்டமென்பதை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாகும்.
நாட்டிற்கு ஊழல் , வறுமை , போதை ஒழிப்பு எவ்வாறு முக்கியமோ அதே போன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதியை நிலைநாட்டுவதும் முக்கியமாகும்" என மேலும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக விவசாயம், மீன்பிடி, கலாசாரம் மற்றும் ஆன்மீக வாழ்வுடன் இணைந்த நிலங்கள் இன்று திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி வருகின்றன. யுத்தத்துக்கு பின்னர் பாதுகாப்பு, அபிவிருத்தி, வன பாதுகாப்பு போன்ற காரணங்களை முன்வைத்து தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்கள் கைப்பற்றப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்நில ஆக்கிரமிப்புகள் மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, அவர்களின் அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. விவசாய நிலங்கள் பறிபோகும் போது குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. மீள்குடியேற்றம் தாமதமாகி, மக்கள் ஏமாற்றப்பட்டு வீதிக்கிறங்கிய பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன் ஒரு கட்டமாக திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் விவசாய நெற் செய்கை காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக 800 ஏக்கர்களை அபகரித்த நிலையில் அம் மக்கள் மழை ,வெயில் பாராது தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை 50 நாட்கள் கடந்த நிலையில் முன்னெடுத்தனர்.
டித்வா புயல்
ஆனால் துரதிஷ்டவசமாக திட்வா புயல் பேரிடர் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். ஆனால் தற்போது வரைக்கும் அம்மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை .இவ்வருடத்திலாவது நீதியான தீர்வு கிடைக்கும் என குறித்த விவசாயிகள் நம்புகின்றனர்.
இது குறித்து அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எம்.எம்.எம்.முக்தார் தெரிவிக்கையில் " தற்போதைய அரசாங்கங்கமும் கடந்த கால அரசாங்கம் போன்று சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றது.
எடுத்துக்காட்டாக திருகோணமலை மாவட்ட குச்சவெளி பகுதியில் நகர் பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் தொல்பொருள் பகுதி என பதாகைகள் இடப்பட்டுள்ளது.இதனை தொல்பொருள் திணைக்களம் மக்கள் நிலங்களை அத்துமீறி அடாத்தாக செய்துள்ளது.

இது போன்று கடந்த நவம்பர் 05க்கு முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இவ்வாறான சம்பவம் பதிவாகியது.தமிழ் ,முஸ்லீம் சமூகம் வாழக் கூடிய பகுதிகளை இலக்காக கொண்டு காணிகளை எந்த அரசாங்கமாயினும் கையகப்படுத்துகின்றனர்.
ஊடகம் வாயிலாக சொல்வதை போன்று செயலிலும் காட்ட வேண்டும். இது அங்கு உரிமைகள் விடயத்தில் குறைவாக உள்ளது.தற்போதைய அரசின் கட்டமைப்பு எவ்வாறு அமையப்போகிறது சிறுபான்மை சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்கப்போகின்ற நிலை கேள்விக்குறியாகவுள்ளது.
எனவே தான் ஊடகங்களில் கூறப்படும் விடயங்கள் மக்களுக்கு தெளிவின்மையாகவுள்ளது. இது போன்று பயங்கரவாத தடுப்பு சட்டம் புதிய பரிணாமத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர். இது சிறுபான்மை சமூகத்துக்கு பாரிய பாதக விளைவுகளை கூட கொண்டு வரலாம்" எனவும் தெரிவித்தார்.
நில உரிமையை பாதுகாப்பது ஒரு மனித உரிமையாக காணப்படுகிறது.ஆனால் கடந்தகால வரலாறுகள் தமிழ் ஈழத்தில் உள்ள மக்களை வீதிக்கு இறக்கியுள்ளது. உரிமைகளை வெற்றி கொள்ளவும் இனமதங்களை பாதுகாக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் , வெளிப்படையான மற்றும் நீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை தமிழ் பேசும் சமூகம் எதிர்பார்க்கின்றது.
இவ்வாறான பல காரணங்களால் நில ஆக்கிரமிப்பும் வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரமும் வடகிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றன.
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை விவகாரம்,தையிட்டு விகாரை விவகாரம் என நில அபகரிப்பின் மீதான தாக்கம் பௌத்தமயமாக்கலை முன்னிறுத்தி பொலிஸாரின் பாதுகாப்புடன் அடாவடித்தனமும் அட்டூழியங்டளும் அரங்கேற்றப்படுகிறது.
இதன் மூலம் விவசாய துறையை பார்க்கின்ற போது தலைமுறைகள் கடந்து பயிரிடப்பட்ட வயல்கள் இன்று வேலி போடப்பட்டு, “அரச நிலம்” அல்லது “பாதுகாப்பு வலயம்” என அறிவிக்கப்படுகின்றன. நிலம் இழந்த குடும்பங்கள் தொழிலிழப்புக்கும் வறுமைக்கும் தள்ளப்படுகின்றனர்.
அபிவிருத்தி
இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி நகரங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் சமூக கட்டமைப்பு மெதுவாக சிதைவடைகிறது. நில உரிமை மறுக்கப்படுவது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மறுப்பதற்கு சமம். நில ஆக்கிரமிப்பை நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீள வழங்குவது நிலையான சமாதானத்திற்கான அடிப்படை ஆகும்.
அபிவிருத்தி என்ற பெயரில் நில அபகரிப்பு அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை நிலமற்றவர்களாக்குவதற்காக அல்ல. ஆனால் வடகிழக்கில் பல இடங்களில் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
மக்களுடைய ஆலோசனைகள் இன்றி முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எதிர்ப்பையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்குகின்றன. பாடசாலைகள், மருத்துவமனைகள், வீடுகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பிரம்மாண்டமான சட்டவிரோத கட்டுமானங்கள் முன்னுரிமை பெறுவது கேள்விக்குறியாக உள்ளது.

அபிவிருத்தி மனிதநேயத்துடன் இருக்க வேண்டும். நில உரிமைகளை மதித்து, மக்களின் ஒப்புதலுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியே உண்மையான முன்னேற்றமாகும். கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்பான விடயங்கள் புதிய ஆண்டிலும் இடம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்திய ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.
நில உரிமையும் நல்லிணக்கமும் நிலப் பிரச்சினை தீர்க்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை. வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு தொடரும் வரை இனங்களுக்கிடையிலான நம்பிக்கை உருவாகாது. நிலம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளம், போருக்குப் பிந்தைய காலத்தில் நிலங்களை உரிய மக்களுக்கு மீள வழங்குவது நல்லிணக்கத்தின் முக்கிய அடையாளமாக இருக்கும்.
இது நீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நில உரிமையை உறுதி செய்வது அரசின் கடமையாக இருக்க வேண்டும். நிலங்களை கபளீகரம் செய்ததன் காரணமாக பலர் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 05 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.