கண்டம் விட்டு கண்டம் பாயும் வடகொரிய ஏவுகணைகள்: புதிய எஞ்சின் சோதனையால் உலக நாடுகள் அச்சம்!
வடகொரியா சமீபத்தில் நடத்திய திட-எரிபொருள் (solid-fuel) ரொக்கெட் எஞ்சின் சோதனையானது, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்காக (ICBM) வடிவமைக்கப்பட்டது என்று தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 28 அன்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சோதனையில், கார்பன் ஃபைபர் (Carbon fibre) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏவுகணை எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த வகை எஞ்சின்கள் எடை குறைந்தவை ஆனால் அதிக வலிமை கொண்டவை என்பதால், ஏவுகணையின் இலக்கு தூரத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதிக எடையுள்ள மற்றும் பல வெடிகுண்டுகளை (Multiple warheads) ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் திறனை வழங்கும் என்று தென்கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIS) விளக்கியுள்ளது.
2024இல் வடகொரியா சோதனை செய்த மாடலை விட, தற்போதைய புதிய எஞ்சின் அதிக உந்துவிசை (Thrust) கொண்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக வடகொரியா தனது ஏவுகணைகளை அதிக உயரமான கோணத்தில் (Lofted trajectory) ஏவி, அவற்றை ஜப்பான் அல்லது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் விழச் செய்கிறது.
இது மற்ற நாடுகளின் நிலப்பரப்பைக் கடக்காமல் ஏவுகணையின் வலிமையைச் சோதிக்க உதவும் ஒரு வழியாகும். ஐ.நா பாதுகாப்பு சபையின் தடையை மீறி வடகொரியா தொடர்ந்து இத்தகைய அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி வருவது, அப்பகுதியில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வடகொரியாவின் இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் அதன் மூலோபாயப் படைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம் என கிம் ஜோங் உன் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.