கடலுக்கு அடியில் அணு ஆயுதத்தை சோதனை செய்த வடகொரியா
வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுதத்தை சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக வட கொரிய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது இராணுவ பலத்தைக் காட்டிவருகிறது. இப்படி இருதரப்பினரும் தங்கள் வலிமையைக் காட்டி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |