உக்ரைன் போர் குறித்து வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் நடைபெறும் போருக்கு ரஷ்யாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளதாக பியொங்க்யாங் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிம் ஜொங் உன், “உக்ரைனிய நெருக்கடிக்கான மூல காரணத்தை சமாளிக்க ரஷ்யா எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும்” தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்பு
மேற்கத்திய நாடுகள், கடந்த வருடம் முழுவதிலும் வடகொரியா சுமார் 11,000 இராணுவத்தினரை ரஷ்யாவுக்கு அனுப்பியிருப்பதாக நம்புகின்றன.
2022 பெப்ரவரியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் யுத்தத்தை தொடங்கியதையடுத்து, ரஷ்யாவுக்கு வடகொரியாவின் ஆதரவு தொடர்ந்து வலுப்பெற்றுவருகிறது.
கிம் மற்றும் லாவ்ரோவின் சந்திப்பு “தோழமை மற்றும் நம்பிக்கையால் நிரம்பிய சூழலில்” நடைபெற்றது என வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவமும் மக்கள் பலத்த நம்பிக்கையுடன் தங்கள் நாட்டின் மானத்தையும் அடிப்படை நலன்களையும் காக்கும் இந்த புனிதப் பணியில் வெற்றியை உறுதியாக பெறுவார்கள் என கிம் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
ரஷ்ய வெளியுறவுத்துறை டெலிகிராமில் வெளியிட்ட காணொளியில்,
இருவரும் கைஓட்டி தழுவிக்கொண்டு சந்திப்பது பதிவாகியுள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, லாவ்ரோவ், வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சோன் ஹூயியையும் சந்தித்தார்.
உக்ரைனில் ரஷ்யாவுக்காக போராடும் “வீரமான வடகொரிய இராணுவத்தினரை லாவ்ரோவ் பாராட்டியதாக ரஷ்யாவின் டாஸ் TASS செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய-உக்ரைன் எல்லை
வடகொரியா, ஏப்ரல் மாதத்தில்தான் தங்கள் படைகளை ரஷ்யாவுக்கு அனுப்பியதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.
ஆனால் உக்ரைனும் மேற்கு நாடுகளும், பல மாதங்களாகவே வடகொரிய படைகள் ரஷ்ய-உக்ரைன் எல்லையில் செயல்பட்டுவருவதாகக் கூறிவந்தனர்.
கடந்த ஆண்டு ஜூனில் கிம் ஜொங் உன் மற்றும் விளாடிமிர் புடின் இடையே தற்காலிக இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு கைச்சாத்தாகி, எதிரிகளால் தாக்கப்பட்டால், ஒருவருக்கொருவர் ஆதரவு தர ஒப்புக்கொண்டனர்.
