மீண்டும் பறக்கவிடப்பட்ட பலூன்களால் மூடப்பட்ட சியோல் விமான நிலையம்
வடகொரியாவில் இருந்து மீண்டும் பறக்கவிடப்பட்ட கழிவுகளுடனான பலூன்களால் தென் கொரியாவின் சியோல் விமான நிலையம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவின் இந்த செயற்பாட்டின் காரணமாக தென் கொரியாவின் சியோல் விமான நிலைய போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வடகொரியாவில் பலூன் ஒன்று சியோல் விமான நிலையத்தின் பயணிகளுக்கான இரண்டாவது முனையத்தில் தரையிறங்கியுள்ளதுடன் மூன்று பலூன்கள் ஓடுதளத்தில் தரையிறங்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட விமான சேவை
இதன் காரணமாகவே சியோல் விமான நிலையத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டு நேற்று(26.06.2024) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த மே மாத இறுதியில் இருந்தே தென் கொரியாவிற்குள் குப்பைகள் நிரப்பிய பலூன்களை வடகொரியா பறக்கவிட்டு வருகிறது. பல நூறு பலூன்கள் தென் கொரியாவின் பல பகுதிகளில் தரையிறங்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்று சியோல் விமான நிலைய எல்லையிலும் அதைச் சுற்றியும் பல பலூன்கள் காணப்பட்டன. வடகொரியாவால் சியோல் விமான நிலையம் மூடப்படுவது இது முதல் முறையல்ல என்றே அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
வடகொரிய எல்லையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1.46 முதல் 4.44 வரை உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் விமான நிலையம் சேவையை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் ஷாங்காயில் இருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று சீனாவின் யாண்டாய்க்கு திருப்பி விடப்பட்டது மட்டுமின்றி, தரையிறங்க காத்திருந்த பல விமானங்கள் தாமதமாகியுள்ளது.
இதேவேளை, புறப்படும் விமானங்களும் பல மணி நேர தாமதத்திற்கு பின்னர் வெளியேறியுள்ளது.
மேலும், செவ்வாய் மற்றும் புதன்கிழமை இடையே சுமார் 100 பலூன்கள் தரையிறங்கியதாகவும் பெரும்பாலான பலூன்களில் காகிதக் குப்பைகளே காணப்பட்டுள்ளதாகவும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |