வடக்கு- கிழக்கு எம்.பிக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் (11.05.2023) இடம்பெறவுள்ளது.
அதன்படி குறித்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் (11.05.2023) முதல் எதிர்வரும் (13.05.2023) ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பகிர்வு, வடக்கு அபிவிருத்தி, வடக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடமாகாணத்தின் சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்புவிடுத்திருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆராயப்படவுள்ள விடயங்கள்
இருப்பினும் இச்சந்திப்புக்களில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் நேற்று முன்தினம் (9.05.2023) ஜனாதிபதிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சந்திப்புக்கு வடக்கு -கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலப் பிரச்சினைகள்
எனினும், ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு இன்னமும் உறுதியாகவில்லை.
அத்துடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இச்சந்திப்பில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் உடனடி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு
மேலும், ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒற்றையாட்சியைக் கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி தயாரெனின் அதில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, திலீபன் மற்றும் பிள்ளையான் ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.