வடக்கும், கிழக்கும் தனித்தனியாக பிரிந்துதான் இருக்கவேண்டும்: ஹரீஸ் எம்.பி (Photos)
வடக்கு, கிழக்கை இணைத்து அதில் முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்போம் என்று கூறும் நிலைக்கு சிலர் முன்வருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
பாலமுனையில் அண்மையில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைவர் அஸ்ரப் காலத்தில் இருந்த முஸ்லிம்களின் உறுதியான நிலைப்பாடு போன்று இப்போது இல்லை. வடக்கு வேறாகவும், கிழக்கு வேறாகவும் தனித்தனியாக பிரிந்துதான் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூற சில முஸ்லிம் தலைவர்களும், அரசியல்வாதிகளும் அதிகமாக தயங்குகிறார்கள்.
தமிழ், முஸ்லிம் சமூகம்
வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் ஒரு நல்ல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் அரகலவின் பின்னர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டிய தருணமிது.
அதற்காக மத்திய அரசியலிலும் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும். இப்போது அமைச்சர் பதவியென்பது கணக்கில்லா நிலைக்கு வந்துவிட்டது. சமூகத்தின் அதிகாரம் ஓங்க முதல் மூன்று இடங்களுக்குள், ஒன்றில் நாம் அமர வேண்டும்.
அரசியலமைப்பு நகல்
இந்த நிலைப்பாட்டை தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கடந்த 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நகலாக நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
ஜனாஸாக்கள் பற்றியெரிந்த போது அந்த குடும்பங்கள் அடைந்த வலியை எமது அரசியல் பிரமுகர்கள் உள்ளார்ந்தமாக உணர்ந்திருக்கவில்லை. அன்று அதற்கான தீர்வை தரும் அதிகாரம் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபயவிடமே இருந்தது.
அரசாங்க பக்கமிருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா, அமைச்சர் அலி சப்ரி ஆகியோர்களின் முயற்சி தோல்வியடைந்த பின்னரே அவர் பேயாக, பிசாசாக இருந்தாலும் கூட தீர்வு அவரிடம் தான் இருப்பதை அறிந்து பேசினோம்.
சமூகத்தில் பேசப்படுபவைகளுக்கு பயந்துகொண்டு கோழைத்தனமாக ஒதுங்கியிராமல் துணிந்து எங்களை பலிகொடுத்து அந்த நாட்களை வெற்றிகொண்டோம்.
கடந்த காலங்களில் சமூக நலனுக்காக நல்ல கருத்துக்களை முன்வைத்த தலைவர் அஸ்ரபுக்கே முட்டை வீசிய சமூகத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற நாங்கள் பழிச்சொற்கள் வரும், அபாண்டங்கள் வரும், ஏச்சுப்பேச்சுக்கள் வரும் என்பதெல்லாம் தெரியாமல் அரசியல் செய்யவில்லை.
பிரச்சினைகளுக்கான தீர்வு
சமூகத்தின் வலியை போக்க அவர்களுடன் சென்று பேசினோம். பல வருடங்களின் பின்னர் காலம் எமக்கு சாதகமாக அமைந்திருக்கும் போது விதண்டாவாதம் பேசிக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதனால் காலத்தை கவனத்தில் கொண்டு துரிதமாக இயங்க ஆரம்பித்துள்ளோம். விமர்சனங்களுக்கு அஞ்சி கோழைத்தனமாக ஒதுங்க முடியாது.
புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானவுடன் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைத்தோம். அதில் முக்கியமாக அமைந்த தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களை பற்றி எடுத்துரைத்தோம், கடற்தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், காணி பிரச்சினைகள், நிர்வாக எல்லை பிரச்சினைகளை பற்றி பேசினோம். அதுபோல பல பிரச்சினைகளை பேசியுள்ளோம்.
நாங்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்த்து கொடுக்குமாறு குறித்த இலாகாக்களுக்கான அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதில்
இப்போது தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்க நடவடிக்கை
இடம்பெற்று வருகின்றது. கடற்தொழிலாளர்கள், விவசாயிகளின் எரிபொருள் பிரச்சினைக்கான
தீர்வு கிட்டவுள்ளது என தெரிவித்துள்ளார்.



