சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இணையத்தள நிகழ்ச்சியில்
அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பிரதான பாதாள உலகக் குழு தலைவர்கள் இருவர் இணைய ஊடகமொன்றில் நேரலையில் இணைந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிரபல யூடியூப் இணைய தளமொன்றின் நிகழ்ச்சியில் குறித்த இரண்டு பாதாள உலகக் குழு தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொமாண்டோ சலிந்த மற்றும் கெஹல்பத்தர பத்மே ஆகிய இரண்டு பாதாள உலகக் குழு தலைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், தம்மை எவரும் கைது செய்யவில்லை என குறித்த பாதாள உலகக்குழுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் தற்பொழுது தங்கியுள்ள நாட்டின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ என்ற பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரை படுகொலை செய்ததாக கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பொய்யான ஊடகவியலாளர்கள் போலி செய்திகளை வெளியிடுவதாகவும் தங்களை எவரும் கைது செய்யவில்லை எனவும் சலிந்த மற்றும் பத்மே ஆகியோர் குறித்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் கூறும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
சலிந்த என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் வீடியோ அழைப்பு மேற்கொண்டு தனது முகத்தையும் காண்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொலைபேசி அழைப்பானது காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.