நன்கொடை நாடுகள் இனி இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவது சந்தேகம்: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
நாட்டின் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக குழப்பத்தில் இருந்து மீள்வதற்கு, நன்கொடை நாடுகளோ அல்லது உலகளாவிய நிதி நிறுவனங்களோ இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவது சந்தேகத்திற்குரியது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் மூத்த துணைத் தலைவரும், ஊடக ஆலோசகருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கைக் கையாள்வதை மீளாய்வு செய்யும் போது, நன்கொடை நாடுகளோ அல்லது உலகளாவிய நிதி நிறுவனங்களோ இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவது சந்தேகத்திற்குரியது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) கடுமையாகப் பயன்படுத்துவது குறித்து கிட்டத்தட்ட ஐக்கிய நாடுகளின் அனைத்து முகவர் அமைப்புகளும் முழு உலக சமூகமும் அதிருப்தி அடைந்துள்ளன.
காலாவதியான மற்றும் கண்டனம் செய்யப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமான பொதுக் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நசுக்குவது, நன்கொடையாளர்கள் மற்றும் கடனாளிகள் இலங்கை மீது பரிதாபப்படுவதற்கான அறிகுறிகளாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையை ஒரு தோல்வியுற்ற நாடு
6 மில்லியன் மக்களுக்கு (உலக உணவுத் திட்டத்தின் படி) ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கத் தவறியதன் மூலமும், கடனை திருப்பி செலுத்தாதன் மூலமும், இலங்கையை ஒரு தோல்வியுற்ற நாடு என்று முத்திரை குத்துவதற்கான அனைத்து அளவுகோல்களையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சரிந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட இலங்கையர்கள், உலக சமூகம், மகாநாயக்கர்கள், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் 22 மில்லியன் இலங்கை வாழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரவும் அரசாங்கம் தவறியுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் பின்னடைவு
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து மறுத்து வருகின்றமையே, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த இடைக்கால அரசாங்கத்திற்கும் அதன் பாதை வரைபடத்திற்கும் ஒரு புதிய ஆணைக்காக அவர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பியதாச குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைமுக நிகழ்ச்சி நிரல், கூடுமானவரை அவரது அரசியல் பிழைப்பை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்று பேராசிரியர் பியதாச குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ள 51 ஆவது, ஜெனிவா அமர்வின் பின்னர், இலங்கை ஐரோப்பியாவின் GSP+ வர்த்தக வசதியை இழக்கும் சூழ்நிலை இருப்பதாக அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.