மனசாட்சி உள்ள எவரும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியாது-எதிர்க்கட்சித் தலைவர்
மனசாட்சி உள்ள எவரும் இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டில் அமைச்சு, பதவிகள், சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்வது என்பது என்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குளியாப்பிட்டிய தொகுதியின் அதிகார சபைக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிள்ளைகள் போஷாக்கு இன்றி மயங்கி விழுகின்றனர்

நாட்டு பிள்ளைகள் சரியான போஷாக்கு இன்றி மயங்கி விழுகின்றனர். அப்பாவி இளைய சமுதாயம் இருளான எதிர்காலம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றது.
முழு நாட்டு மக்களும் வறுமையால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இப்படியான தருணத்தில் உணர்வுள்ள எவராலும் அமைச்சு பதவிகளுக்கோ, சிறப்புரிமைகளுக்கோ அடிப்பணிய முடியாது.
நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகளை 15 ஆகவும் பிரதியமைச்சர் பதவிகளை 15 ஆகவும் குறைந்து நாட்டுக்கு முன்னுதாரணத்தை வழங்க வேண்டும். எனினும் மொட்டுக்கட்சியின் பலத்தால், ஜனாபதிபதியாக பதவிக்கு வந்த ஜனாதிபதியால், அதனை செய்ய முடியாது.
தீவிர முதலாளித்துவத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது

தீவிர முதலாளித்துவம் மற்றும் தீவிர சமவுடமை கொள்கைகள் மூலம் நாடு ஒன்றை கட்டியெழுப்ப முடியாது. சமூக ஜனநாயகம், சமூக சந்தைமய கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுகிறது.
திறமை, இயலுமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட சமூக முறைமையை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வரவு செலவுத்திட்டத்தின் போது அவர் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைவதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை அவரது புதல்வர் சத்துர சேனாரத்னவே மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.