ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் அரசாங்கத்தில் இணையமாட்டார்கள்! சஜித் நம்பிக்கை
அமைச்சுப் பதவிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என்று சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தின் தீவிர முயற்சி
அமைச்சுப் பதவிகள் வழங்கி அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து குறைந்த பட்சம் ஐந்து பேரை விலைக்கு வாங்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆயினும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு ஒருவரைக் கூட ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவர்களால் தேடிக் கொள்ள முடியாது.
நாடு தற்போதைக்கு திவால் நிலையின் அடிமட்டத்துக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.
அதில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனநாயக ரீதியான ஆதரவை வழங்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம்.
ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தொடர்ந்தும் நாம் தோல்வியடையும் காரணம் என்ன? அதனை ஆராய்ந்து சீர்செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.