இயற்கை பசளைகளை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை! - மஹிந்தானந்த
இயற்கை பசளைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இயற்கை பசளைகளை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தினாலும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் மூலம் அதற்கான அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பெரும்போக காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் நிவாரண அடிப்படையில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே இயற்கை உர வகைகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இயற்கை உரம் இறக்குமதி செய்ய வேண்டுமாயின் அது குறித்து ஆராய்வதற்கு வடமேல் மாகாண பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உர தட்டுப்பாடு குறித்து எவரும் தேவையற்ற அச்சங்களை கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.