அத்தியாவசிய உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா! அமைச்சர் வசந்த விளக்கம்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கியுள்ளதால் எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரப்பப்படும் செய்திகளை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க முற்றாக மறுத்துள்ளார்.
தரமற்ற சில கொள்கலன்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி தொடர்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும், உணவுப் பொருட்களை சந்தைக்கு விடுவிப்பதில் எந்தவித தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூகத்தில் இத்தகைய போலிப் பிரசாரத்தைப் பரப்புவதற்கு திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும், கையாளப்படும் கொள்கலன்களின் கொள்ளளவும் இயல்பு நிலையை விட அதிகரித்துள்ளதாக துறைமுக நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளாக்கினார்.
கொள்கலன் தேக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று ஒரு கதையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறு எந்தவொரு கொள்கலன் தேக்கமும் இல்லை. துறைமுகங்களுக்கு அதிகமான கப்பல்களும் கொள்கலன்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை எந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட முக்கிய நுகர்வுப் பொருட்கள் தொடர்ந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் சில பொருட்களின் சில்லறை விலைகளைக் குறைந்த மட்டத்தில் பேண முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பேசப்பட்ட மிளகாய் கொள்கலன்கள் குறித்து அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார். அது தனிமைப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிகளுடன் தொடர்புடைய ஒரு தொழில்நுட்ப விடயம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த 2,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. தரப் பரிசோதனையின் போது அதிக ஈரப்பதம் காணப்பட்ட 7 அல்லது 8 மிளகாய் கொள்கலன்கள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளன.