கைதுக்கு எதிராக ரணில் தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட விவகாரத்தினை சவாலுக்கு உட்படுத்தி எவ்வித அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க, 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி தி பொதுமக்களின் நிதியை தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 26 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார். அதன்பின், 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அரசியலமைப்பின் 126(2) ஆம் கட்டளையின் படி, நிர்வாக அல்லது செயற்பாட்டு நடவடிக்கையால் அடிப்படை உரிமை மீறப்பட்டது எனக் கூறும் எவர் வேண்டுமானாலும் அந்த மீறல் நிகழ்ந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட நாள் அல்லது அவர் விடுதலையான நாள் ஆகியவற்றைப் பொருத்து, அந்த ஒரு மாத காலம் 2025 செப்டம்பர் 22 அல்லது 26 அன்று முடிவடைந்தது.
ஆனால் அந்த காலப்பகுதியில் அவரது சார்பாக எந்த அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால், கைது விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் எந்த நிவாரணத்தையும் நாடவில்லை என்பது உறுதியாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எதிரான நீதவான் நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
நியாயமற்ற வகையில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதாக சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில், கைதிற்கு எதிராக மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.




