மூன்றாம் பாலினம் என்பதற்கு முறையான வரைவிலக்கணம் இல்லை: நாடாளுமன்றத்தில் கேள்வி
மூன்றாம் பாலினம் என்பதற்கு முறையான வரைவிலக்கணம் பாலின சமத்துவ சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரசியலமைப்பில் பால் என்பதற்குள் ஆண் மற்றும் பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அப்பாற்பட்டு பாலினம் என்ற பதத்தை இணைப்பது அரசியலமைப்பின் 12(2) உறுப்புரைக்கு அப்பாற்பட்டது என்பதையே, உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(19) இடம்பெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
மூன்றாம் பாலினம்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இந்த சட்டமூலத்தில் பாலினம் என்பது யார் என்று தெளிவான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை.
சர்வதேச மட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது.
இலங்கையின் அரசியலமைப்பின் 12(2 ) உறுப்புரையில் ஆண் மற்றும் பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக பாலினம் (ஜென்டர்) என்ற சொற்பதம் தற்போது தெரிவிக்கப்படுகிறது.
இதற்குரிய ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மைகள் ஏதும் கிடையாது. இந்தநிலையில், சட்டமூலத்தில் பாலினம் (ஜென்டர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின் 12(2) உறுப்புரைக்கு அப்பாற்பட்டது.
எனவே 12(2) உறுப்புரையை திருத்தம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக பாலின சமத்துவ சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதற்கான கொள்கை வரைபை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சபைக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பணிப்புக்களை வழங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை "என நீதியமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |