சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தில் தொடரும் மர்மம்:துப்பாக்கியில் கைரேகைகள் தெளிவில்லை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டறிவது கடினமாக உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.
பெயர் குறிப்பிட விரும்பாத மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
துப்பாக்கியில் சுடும்போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக, அதில் பதிந்துள்ள விரல் அடையாளங்கள் அழிந்துபோகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், இந்தத் துப்பாக்கியிலும் கைரேகைகள் அழிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், தோட்டாக்கள் மற்றும் காலம் குறித்து கண்டறிய முடிந்தாலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று மங்கலாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் வெளியாட்கள் எவரும் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் தவறதலாக நடந்த துப்பாக்கிச் சூடா அல்லது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவத்திற்கு முன்னதாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீட்டின் உட்புற சீ.சீ.ரீ.வி. காட்சிகளை பொலிஸார் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 மி.மீ. பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் வழக்கு தொடர்பான ஏனைய பொருட்களை எதிர்வரும் 28ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.