அநுர அரசு எந்த கல்விச் சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு கல்விச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசு கொண்டு வந்துள்ளதாக கூறப்படும் கல்வி சீர்திருத்தங்களில் உண்மையில் எந்தச் சீர்திருத்தமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடத்திட்டங்களில் சிறிய மாற்றங்களை மட்டும் செய்து, கல்வியை டிஜிட்டல் முறையில் கற்பிப்பதற்கான யோசனைகளை முன்வைத்திருப்பதே இந்த கல்வி சீர்திருத்தங்களாக காண்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மேலோட்டமான நடவடிக்கைகளை கல்வி சீர்திருத்தம் என அழைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் ஆட்சியாளர்கள், குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கைபேசிகள் மூலம் கற்பிப்பதை ஊக்குவித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் தீங்கு விளைவுகளை அனுபவித்துள்ளதாகக் கூறப்படும் அவுஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள், 16 வயதிற்குக் கீழான குழந்தைகளுக்கு கைபேசிகள் வழங்கக் கூடாது என சட்டங்களை இயற்றி வருவதாகவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இந்த கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசுக்கு எதிராக இருப்பதற்காக அல்ல; மாறாக, குழந்தைகளை பாதுகாப்பதற்காகவே என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது, விஜேதாச ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.