தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இதுவரை எட்டப்படாத தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் நேற்று நீண்ட விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை பொதுவேட்பாளர் தொடர்பான இறுதிமுடிவு அறிவிக்கப்படும் என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட ஆலோசனை
யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு தமிழ் பொது வேட்பாளரை இறுதி செய்யும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.
தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்காக பல மணிநேரமாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆலோசனை நடத்தியபோதும், பொதுவேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |