சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெற உள்ள நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை
இதேவேளை, உச்ச நீதிமன்றினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒன்பது விடயங்களை புறந்தள்ளி நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை சபாநாயகர் அங்கீகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை எனவும் நாடாளுமன்றில் சபாநாயகருக்கு நம்பிக்கை உள்ளதா என பரீட்சிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கட்சி அதிகாரபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் அநேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |