உடனடியான தேர்தலுக்கு வாய்ப்பில்லை:மனுஷ நாணயக்கார
உடனடியாக தேர்தலுக்கு செல்லும் வாய்ப்பில்லை எனவும் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தில் நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது பதவியேற்றுள்ள அமைச்சரவை தற்காலிகமானது.
இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கமும் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும். சர்வக்கட்சி அரசாங்கத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் உள்ளடங்கும் புதிய அமைச்சரவை
அந்த கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், அனைத்து கட்சிகளும் உள்ளடங்கும் வகையில் அமைச்சரவை உருவாக்கப்படும்.
சர்வக்கட்சி அரசாங்கம் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும். தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. கலைக்குமாறு நாடாளுமன்றம் கோரினால், கலைக்க முடியும்.
புதன் கிழமை 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிக்கும்.
நாடாளுமன்றத்தின் இந்த பதவிக்காலத்திற்குள் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். பிரச்சினைகளை தீர்த்த பின்னர் தேர்தலுக்கு செல்வோம் எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.