சிறுபோக செய்கைகளுக்குரிய பங்குகளை வழங்கும் அதிகாரம் எதுவும் இல்லை: எஸ்.செந்தில்குமரன்
நீர்ப்பாசன திணைக்களத்தினால் சிறுபோக செய்கைகளுக்குரிய பங்குகளை வழங்கும் அதிகாரம் எதும் இல்லையென இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள உப்பாறு, உடுப்பாற்றக் கண்டல், புலிங்க தேவன் முறிப்பு ஆகிய பகுதிகளில் நீர்பாசன வாய்க்கால்கள் கட்டுமானங்கள் இல்லாத மானாவாரி பயிர்செய்கை காணிகள் மற்றும் ஆற்றொதுக்கு காணிகள் அரச ஒதுக்கீட்டுக் காணிகள் என்பவற்றுக்கு எந்த வித கூட்டத் தீர்மானங்களுமின்றி சுமார் 323 ஏக்கர் வரையான 248 பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைவிட 42ஏக்கர் வரையான 25 பங்குகளும் வழங்கப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நீர்ப்பாசன திணைக்களத்தின் தீர்மானங்கள்
குறித்த சிறுபோக பங்குகளானது 2022 ஆம் ஆண்டு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இரணைமடு நீர்பாசன பணிப்பாளரால் அனுமதிகள் வழங்கப்பட்டு அதன்படியே குறித்த பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாக புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இரணைமடு நீர்ப்பாசன பொறியியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது பயிர்செய்கைக்குரிய நீர் விநியோகப் பரப்பு மற்றும் நீர் விநியோகம் தொடர்பிலேயே நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் விவசாயிகளுக்கு பங்கு வழங்குவதையோ அல்லது பயிர் செய்கை காணிகளை பங்கிட்டு வழங்குவதிலும் சம்பந்தப்படுவதில்லை என்றும் சிறுபோக செய்கைகளுக்குரிய பங்குகளை வழங்கும் அதிகாரம் எதும் இல்லையென தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |