ஊழல் மோசடிமிக்க குடும்ப ஆட்சியை விரட்டுவதனை தவிர மாற்று வழியில்லை: விஜித ஹேரத்
ஊழல் மோசடி மிக்க குடும்ப ஆட்சியை விரட்டியடிப்பதனைத் தவிர்ந்த வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடும்ப ஆட்சியை விரட்டியடிப்பதனை தவிர சீட்டுக்கட்டையின் சீட்டுக்களை அங்கும் இங்கும் கலைப்பதனால் மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வு கிட்டப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் மூலம் அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை முட்டாளாக்க எத்தனிக்கின்றது என்பதே தெளிவாகின்றது என அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் வீதியில் இறங்கி ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகக் கோரும் நிலையில் அவர்கள் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்தை முழுமையாக விரட்டியடித்து விட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட அரசாங்கமொன்றை ஆட்சி பீடமேற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.