நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ச? சிங்கள ஊடகம் தகவல்
தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிருபமா ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சென்றதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நிருபமா ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு முன்பு, அவரது கணவர் திருக்குமார் நடேசனும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பண்டோரா ஆவணங்கள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிருபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பண்டோரா ஆவணத்தில் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் சட்டவிரோத சொத்துக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டோரா ஆவணம் கடந்த மூன்றாம் திகதி வெளியானது.
நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் பல இரகசிய நிறுவனங்கள் மூலம் செய்த பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் பண்டோரா ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண்டோரா ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதன்படி, 2011ம் ஆண்டு நிலவரப்படி திருக்குமார் நடேசனின் சொத்துக்களின் பெறுமதி 160 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிருபமா ராஜபக்ச ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
