அடித்தாலும், விரட்டினாலும் போக மாட்டோம்! விடாப்பிடியாக இருக்கும் நிமல் சிறிபால டி சில்வா
தம்மை அடித்தாலும், விரட்டியடித்தாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததையடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை அவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தீர்மானித்தது.
அமைச்சர் பதவி
இதன்படி, அமைச்சர் பதவிகளை ஏற்று தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க, சாந்த பண்டார, லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டனர்.
எனினும் எங்களை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு போக மாட்டோம் என்று நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.