பசில் ராஜபக்ச இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிப்பை தடுத்திருப்பார் - நிமல் லங்சா
பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்திருந்தால், எரிபொருள் விலைகளை அதிகரிக்க இடமளித்திருக்க மாட்டார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
இதனால் எரிபொருளை விலைகளை குறைக்க தலையீடுகளை மேற்கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் லங்சா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அப்படியில்லை என்றால், பயணக் கட்டுப்பாடுகள் முடிந்த பின்னர் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமையிலான பிரதமர் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் வாழ்க்கைச் செலவு குழுவின் மூலமே எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானித்ததாக அமைச்சர் உதய கம்மன்பில நேற்று கூறியிருந்தார்.
ஜனாதிபதி செயலகம் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.