அடுத்து ஆட்சிக்கு வரப்போவது 100 நாள் மட்டுமே பதவியில் இருக்கும் ஜனாதிபதியா?
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் விசேட நிபந்தனைகளின் கீழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமன பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதை அடிப்படையான நோக்கமாக கொண்டு 100 நாட்களுக்கு மாத்திரமே ஜனாதிபதியாக பதவிக்கு வாக்குறுதியுடன் சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் வாக்குறுதி மட்டுமல்லாது, அதற்கான வேலைத்திட்டம் மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றக் கூடியவர் என நம்பக் கூடிய பின்னணியை கொண்டுள்ள நபரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் சிலரது தலைமையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.