காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்.. அநுர கைது செய்யப்படலாம் - சஜித் தரப்பு கடும் குற்றச்சாட்டு
தற்போதைய ஜனாதிபதி 2030ஆம் ஆண்டில் பதவியிலிருந்து விலகிய பின்னர், நிச்சயமாக சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சலசலப்பான இணையவழி தாக்குதல் (cyberattack) காரணமாக 2.5 மில்லியன் டொலர்கள் அரச நிதி வீணடிக்கப்பட்டதற்கு, நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2.5 மில்லியன் டொலர்கள்
தேர்தல் காலத்தில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிறையிலடைக்கப்பட்ட முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நிதியை முறையாகப் பாதுகாக்கத் தவறியதற்காக அநுரகுமாரவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் சேகரிக்கப்பட்ட ஊழல் விசாரணை தொடர்பான ஆவணங்களை அநுரகுமார அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளுக்காகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், வரிகள் மூலம் பெருமளவிலான வருமானத்தைச் சேகரிக்கும் அரசாங்கம், பொதுப் பணத்தைச் செலவிடுவதில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேவேளை, நிதி அமைச்சின் அமைப்பில் ஊடுருவி 2.5 டொலர்கள் மில்லியன் இழப்பு ஏற்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சில அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் உறுதிப்படுத்தியிருந்தது.