புதுவருடத்தில் இரு வெவ்வேறு கோர விபத்து! 6 சிறுவர்கள் உட்பட 22 பேர் படுகாயம்
நாடளாவிய ரீதியில் பல விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.
கதிர்காமம்
சொகுசுப் பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88வது கிலோமீற்றருக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 15 பயணிகள் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று (01) காலை நேர்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் ஏனையோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம பெலவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளனர்.
வாதுவை
வாதுவையில்-பிரேத ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது முச்சக்கரவண்டி மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் வாதுவையில் உள்ள மயானம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சடலத்தின் பின்னால் சென்றவர்களை வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாணந்துறை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.