புதிய விசா கட்டணம் சர்வதேச பயணிகளின் வருகையை பாதிக்கவில்லை
புதிய விசா கட்டணம் சர்வதேச பயணிகளின் வருகையை பாதிக்கவில்லை என VFS குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் இலங்கையின் விசா ஆவணங்கள் கையாளுகை தொடர்பிலான பொறுப்பு வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
விசா கட்டணம் தொடர்பில் சர்ச்சை
இந்த இந்திய நிறுவனம் கூடுதல் தொகை விசா கட்டணத்தை அறவீடு செய்வதாக பெரும் சர்ச்சை எழுந்திருந்தது.
இந்த கட்டண அதிகரிப்பு காரணமாக நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
விசா கட்டண மாற்றமானது வெளிநாட்டு பயணிகளின் வருகையில் தாக்கத்தை செலுத்தவில்லை என சுட்டிக்காட்டி உள்ளது.
வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விசா கட்டணத்தில் ஏற்படும் சிறிய அளவான மாற்றங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் பாதிப்பை ஏற்படுத்தாது என தமது அனுபவத்தின் மூலம் குறிப்பிட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு பிரதான சுற்றுலா தளம் எனவும் இலங்கையின் ஹோட்டல்கள், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய அனைத்து துறைகளிலும் நியாயமான கட்டண அறவீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் சிறிய விசா கட்டண மாற்றம் பயணிகளின் வருகையில் எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வீ.எஸ்.எஸ் குளோபல் நிறுவனத்திற்கு சுற்றுலா துறை சார் தரப்பினர் தகவல்களை இதுவரை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
துறைசார்ந்தவர்கள் இவ்வாறு தங்களது கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள தவறி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விசா விண்ணப்பங்கள் தொடர்பில் பயண முகவர் நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அநேக சந்தர்ப்பங்களில் பயணிகளின் விண்ணப்பங்களை பயண முகவர் நிறுவனங்கள் நிரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |