தளர்த்தப்பட்ட வாகன இறக்குமதி தடை! புதிய விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்
வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதையடுத்து, மேலதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளமையால் புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்கவுள்ளது.
வாகன இறக்குமதி மீது தாக்கம் செலுத்தும் பிரதான வரிகளில் சொகுசு வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரியே பிரதானமாக உள்ளது.
குறித்த வரியானது 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், 2019ஆம் ஆண்டே திருத்தியமைக்கப்பட்டது.
இயந்திர செயற்றிறன் மீதும் வரி
2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதால் இந்த வரியின் கீழ் வாகனகங்கள் இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும்.
இந்த சொகுசு வரியானது, ரூபா. 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியை கொண்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட உள்ளதோடு அதிகபட்ச சொகுசு வரி 120% ஆகும்.
இது தவிர, 'CC'அல்லது வாகனத்தின் இயந்திர செயற்றிறன் மீதும் வரி விதிக்கப்பட உள்ளது. இது வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்.
வட் வரி
அத்துடன், வரி விலக்கு மீதான சுங்கச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 2023ஆம் ஆண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களின் வகைகளை உள்ளடக்கிய சுங்க வரிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் வாகனத்திற்கு விதிக்கப்படும் 20% சுங்க வரியுடன் 50% கூடுதல் கட்டணம் சேர்க்கப்பட உள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தெரியவருகின்றது.
மேலும், நாட்டில் வட்(VAT) வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின்னர் முதன்முறையாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதால் அந்த வரியும் வாகன விலைகளுடன் இணைகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |