மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம்: உறுதியளித்த ஜீவன் தொண்டமான் (Video)
மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும், இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் தொடர்பான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஸ்தம்பித்திருந்த பணிகள்
"பல்கலைக்கழகத்துக்கான அனுமதி பல்கலைக்கழகங்களுக்கான ஆணைக்குழுவிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. கோவிட், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பணிகள் ஸ்தம்பித்தன.
இது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதியிடம் பேசினேன். கல்வி அமைச்சரிடமும் கலந்துரையாடினேன். இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் .
10 ஏக்கர் காணி உள்ளது. தேவையேற்படின் அங்கு இருக்கும் அரச காணிகளையும் பெறலாம். பல்கலைக்கழகம் அமைந்தே தீரும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
உப பிரதேச செயலகம் வந்தபோது அரசியல் நடத்தினர். நாம் பிரதேச செயலகத்தை இன்று கொண்டு வந்துள்ளோம். 4 ஆயிரம் இந்திய வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்தியுள்ளோம்.
ஶ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கும் விஜயம்
அடுத்த 10 ஆயிரம் வீட்டுத்திட்டதையும் ஆரம்பிக்கவுள்ளோம். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன". என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல், அந்த மகத்தான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து கல்வி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
"மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தின் அவசியத்துவம் பற்றி பலரும் வலியுறுத்தி வந்தனர். இது விடயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் துரிதமாக செயற்பட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேசி அனுமதிபெற்று, எனக்கும் அறிவித்தார். நிதியை திரட்டுவதற்கான வேலைத்திட்டத்தை அமைச்சர் ஜீவன் தயாரித்துள்ளார்.
அரச நிதியை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனை பெற முடியும். நிதி வழிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிடுவார்.
பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு கொட்டகலை ஆசிரியர் கலாசாலை வளாகம் சிறந்த இடம். சூழவுள்ள பகுதியும் அரச காணியாகும். எனவே, எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைக்கு காணி பெறுவதிலும் சிக்கல் இருக்காது, முதலில் பல்கலைக்கழகத்தை நிறுவிவிட்டு - பின்னர் பீடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.
நுவரெலியாவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் ஏனைய பகுதிகளுக்கே செல்கின்றனர். இங்கு பல்கலைக்கழகம் அமைந்தால் அதன்மூலம் அவர்கள் பயன்பெறுவார்கள்.
இன்று நான் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டேன். இது தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சர், பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கல்லூரியின் பீடாதிபதி மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமானும், கல்வி அமைச்சரும் கலந்துரையாடினார்கள். கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்துக் கொண்டனர்.
இதன்போது கல்லூரிக்கு தேவையான விடயங்கள் தொடர்பில் எம்மிடம் மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர், நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர், பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மற்றும் கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |