புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது! பழனி திகாம்பரம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது. இந்த அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது மக்கள் வாழ்வாதார பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி முறையான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தற்போது உள்ள அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்று கொண்டு எந்தவோர் அபிவிருத்தி திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அமைச்சு பதவி

மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவன் நான். அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அமைச்சு பதவி தேவையில்லை. மலையகத்தில் மாத்திரம் அல்ல நாட்டில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினை காணப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் அபிவிருத்தி
திட்டங்களுடன், படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பையும் பெற்று
கொடுப்பேன். அதேபோல் பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்றி
காட்டுவேன் என குறிப்பிட்டுள்ளார்.