மீண்டும் பாணின் விலை அதிகரிக்ககூடும்!: அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று நடைமுறைக்கு வருவதை அடுத்து வெதுப்பக உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறையின்படி, பாண் உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவுக்கு வரி
கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளமையால், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் இயல்பாகவே வெதுப்பக தொழில் பாதிக்கப்படும்.
எனவே இந்த அனைத்து காரணிகளின் விளைவாக வெதுப்பகப் பொருட்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது.
எனினும் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்
இருப்பினும் மருந்துகள், பெற்றோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உள்ளூர் உற்பத்தியாளர் அல்லது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய பால், மூல இலைகள், இலவங்கப்பட்டை அல்லது உள்ளூர் உற்பத்தியாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து பெறப்பட்ட இறப்பர் உள்ளிட்ட சில பொருட்களுக்கு சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர் மின்சார உற்பத்தி அல்லது மாற்று மின்சாரத் தயாரிப்பு, மருத்துவ சேவைகள், நீர் வழங்கல், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து, தையல் சேவைகள், பயண சேவைகள், ஆயுள் காப்பீட்டு வணிகங்கள், திரையரங்குகள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் சேவைகள் உட்பட பல சேவைகளுக்கு இந்தப் புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.