கொழும்பில் பெண் பொலிஸ் அதிகாரியின் புது யுக்தி! சிக்கிய பெரும்புள்ளி
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய கொள்ளுப்பிட்டி பொலிஸார் வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தனியார் வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளுக்கான பணத்தை பலருடன் வந்த சந்தேகநபர், சுத்தியலால் பெட்டகத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக இருந்த 28 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய பெண் பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
அதற்கமைய பெண் கான்ஸ்டபிள் ஒருவர், குறித்த சந்தேக நபருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை ஏமாற்றி புறக்கோட்டை பிரதேசத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சந்தேகநபர் தனது அடையாளம் தெரியாத காதலியைப் பார்க்கச் சென்றபோது பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபர் கொள்ளையடித்த 11 மில்லியன் ரூபாய் பணத்தில் 275,000 ரூபாய் மாத்திரமே கையில் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், குறித்த பணம் கடுவெல பிரதேசத்தில் உள்ள தனது காதலிக்கு சுமார் 150,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்