பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய குடியேற்றக் கிராமங்கள் : கிடைத்துள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட ச் சங்கங்களால் நிர்வகிக்கப்படும் அரச தோட்டக் காணிகளில், தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளை, உத்தியோகபூர்வ, புதிய குடியேற்றக் கிராமங்களாக அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளை இனங்கண்டு, அந்தப் பகுதிகளை புதிய குடியேற்றக் கிராமங்களாக உத்தியோகபூர்வமாக்கும் சட்ட வரைபுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் பிராந்திய நிறுவனங்களின் மேற்பார்வையில், அரசினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களுக்குள் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை புதிய கிராமங்களாக பிரகடனப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சியின் கீழ் தற்போதைய பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அதற்கான முன்மொழிவையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்தநிலையில் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சட்டமியற்றும் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக, பெருந்தோட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய குழுவொன்றை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




