பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்! - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
செப்டெம்பர் மாதமளவில் பிரித்தானியாவில் கோவிட் வழக்குகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து லண்டன் இம்பிரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவன் ரிலே கருத்து வெளியிடுகையில்,
வெப்பநிலை வீழ்ச்சி, பாடசாலைகள் மீள திறக்கப்படுதல் மற்றும் மக்கள் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்வதால் செப்டம்பர் மாதமளவில் கோவிட் வழக்குகளில் உயர்வு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால், இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் திங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பிசிஆர் சோதனை எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள்.
எனினும், அது கட்டாயமாக இருக்காது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது முகக்கவசம் அணியவும் மற்றவர்களுடனான தொடர்பைக் குறைக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள்.
எனினும், புதிய வழிகாட்டுதலின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
திங்கள்கிழமை முதல், கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றுக்கொண்டவர்கள் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தால் இனி 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் செலவிட வேண்டியதில்லை.
அவர்கள் ஒரு பிசிஆர் சோதனை எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள், ஆனால் அது கட்டாயமாக இருக்காது மற்றும் அவர்கள் முடிவுக்காக காத்திருக்கும்போது தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
இந்நிலையிலேயே, செப்டம்பர் மாதமளவில் பிரித்தானியாவில் கோவிட் வழக்குகள் அதிகரிக்கும் என பேராசிரியர் ஸ்டீவன் ரிலே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33,074 புதிய கோவிட் வழக்குகள் மற்றும் 94 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,179,506 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130,701 ஆக உயர்நதுள்ளது. கடந்த வாரம் இந்த நேரத்தில் 30,215 புதிய கோவிட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன,
அதே போல் பதினைந்து நாட்களுக்கு முன்பு 31,117 வழக்குகளும் பதிவாகியுள்ளன. எனினும், ஜூலை 15 அன்று 48,553 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவை குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.